LOADING...
தமிழக வானிலை அப்டேட்: மே 1 முதல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மே 1 முதல் 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழக வானிலை அப்டேட்: மே 1 முதல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 30, 2026
06:28 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று ஏப்ரல் 30 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்த மழையானது கோடை வெப்பத்திற்கு மத்தியில் மக்களுக்குச் சற்று நிம்மதியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 மாவட்டங்கள்

நாளை மே 1 ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மே மாதம் கனமழையுடன் தொடங்கவுள்ள நிலையில், நாளை மே 01, 2026 அன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதியன்று மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை

சென்னையில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் அசௌகரியம்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருந்தாலும், சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெயில் வாட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40° செல்சியஸை ஒட்டியும், நாளை மே 1 ஆம் தேதி 41° செல்சியஸ் வரையிலும் உயரக்கூடும். அதிக வெப்பநிலையுடன் காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்களுக்கு உடல் ரீதியான அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சென்னை மக்கள் வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

கடல் சீற்றம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம்

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக, வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இதன் காரணமாக ஏப்ரல் 30 முதல் மே 4 ஆம் தேதி வரை மீனவர்கள் குறிப்பிட்ட அந்த வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தமிழகக் கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்குத் தற்போது எவ்வித நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில தினங்களுக்குத் தமிழகத்தின் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

Advertisement