தமிழக வானிலை அப்டேட்: அடுத்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 11) கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக குழித்துறை, திற்பரப்பு, தக்கலை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்ததோடு, குளிர்ச்சியான காற்றும் வீசியது. கோடை வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு இந்தத் திடீர் மழை ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டத்திற்கும் இந்த மழை பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மழைக்கான காரணம்
மழைக்குக் காரணமாக அமைந்த வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒடிசாவின் உட்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு சத்தீஸ்கர் முதல் உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்து மழை மேகங்கள் உருவாகியுள்ளன. இது அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 17 வரை
ஏப்ரல் 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வானிலை முன்னறிவிப்பின்படி, ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 17 வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வானிலை பெரும்பாலும் வறண்டே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்பநிலை எச்சரிக்கை
அதிகரிக்கப்போகும் கோடை வெயில்
மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13 முதல் 15 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், கடலோர மாவட்டங்களில் அசௌகரியமான சூழல் நிலவக்கூடும்.
சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை நிலவரம்
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36° முதல் 37° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும். மழைக்கான வாய்ப்பு சென்னையில் மிகக் குறைவாகவே உள்ளது. அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்து, போதுமான அளவு தண்ணீர் பருகி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.