மிழகத்தில் நாளை முதல் இடி, மின்னலுடன் மிதமான மழை! இந்த 4 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை (ஜூலை 17) முதல் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தீவிரமடையும் இந்த மழைப்பொழிவு, மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வடக்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமாகப் பெய்யக்கூடும். அதே நேரம் சில மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
முன்னறிவிப்பு
மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு விபரம்
வருகிற ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தின் ஏனைய இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
இதனைத் தொடர்ந்து ஜூலை 20 அன்று தமிழகம் முழுவதும் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கும், ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் சாதாரண லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை
4 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை
மழைக்கான அறிகுறி ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாகக் கரூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து வெப்ப அலை வீச அதிக வாய்ப்புள்ளது.
மேலும், நாளை கடலோரத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையுடன் கூடிய அதிக ஈரப்பதமும் நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடும்.
இருப்பினும், ஜூலை 18 முதல் 20 வரையிலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலும் இயல்பு நிலையை ஒட்டியே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை
சென்னையின் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்?
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்து குளிர்விக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.