Loading...
வெயிலும் மழையும்! தமிழகத்தில் செப்.11 வரை 7 டிகிரி அதிகரிக்கும் வெப்பநிலை; வானிலை ஆய்வு மையம் தகவல்
வானிலை முன்னறிவிப்பு

வெயிலும் மழையும்! தமிழகத்தில் செப்.11 வரை 7 டிகிரி அதிகரிக்கும் வெப்பநிலை; வானிலை ஆய்வு மையம் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2026
06:46 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் (சுமார் 2°C - 4°C) வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் இந்த வெப்ப அதிகரிப்பு நிலவும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

மழை முன்னறிவிப்பு

நாட்கள் வாரியாக மழை முன்னறிவிப்பு (செப். 8 - செப். 10)

செப்டம்பர் 8: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 9: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகப் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 10: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை நிலவரம்

செப்டம்பர் 11, 12, 13 தேதிகளுக்கான வானிலை நிலவரம்

செப்டம்பர் 11: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இருப்பினும், உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பகல் நேரங்களில் வெளியூர் பயணங்களின் போது பொதுமக்கள் போதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT