LOADING...
வெயில் பிளக்கப்போகுது! 3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு
வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப எச்சரிக்கை

வெயில் பிளக்கப்போகுது! 3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 08, 2026
03:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இன்று (08-03-2026) தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் அசௌகரியத்தை உணரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

மழை நிலவரம்: எங்கு வாய்ப்பு?

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை கூறுகிறது. இன்று (மார்ச் 8) கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யலாம். நாளை (மார்ச் 9) நீலகிரி மற்றும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மார்ச் 10 - 14இல் டெல்டா மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 34° செல்சியஸ் வரையும், குறைந்தபட்சமாக 24° செல்சியஸ் வரையும் பதிவாகக்கூடும். நாளை சென்னையின் ஒருசில பகுதிகளில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மார்ச் 9 முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், மார்ச் 14 வரை மாநிலத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement