LOADING...
கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஒரு குட் நியூஸ்! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஒரு குட் நியூஸ்! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 19, 2026
07:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக, மாநிலத்தின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, சுமார் 0.9 கிமீ உயரத்தில் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால் இந்த மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடலோர மாவட்டங்களில் நிலவும் அதிக ஈரப்பதம் காரணமாக, மக்கள் சற்று அசௌகரியத்தை உணரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு

அடுத்த 7 நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, அடுத்த சில நாட்களுக்கு மழை பரவல் பின்வருமாறு இருக்கும்: ஏப்ரல் 19-21 வரை: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நீடிக்கும். ஏப்ரல் 22 மற்றும் 23: மேற்குத் தொடர்ச்சி மலை, கடலோர டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 24 மற்றும் 25: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்ப அலை

வெப்பநிலை மற்றும் வெப்ப அலை எச்சரிக்கை

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். எனினும், அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை நிலவுவதால், இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மதிய நேரங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

Advertisement

சென்னை

சென்னையில் வானிலை எப்படி?

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸாகவும் பதிவாகும். வெயில் மட்டுமின்றி, வளிமண்டலத்தில் நிலவும் அதிக ஈரப்பதம் காரணமாக, சென்னைவாசிகள் அசெளகரியத்தை உணரக்கூடும். எனவே, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழகத்தில் பெய்யக்கூடிய இந்த மழை, அந்த பகுதிக்கு கோடை வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement