அடுத்த 6 நாட்கள்! வெப்பநிலை உயர்ந்தாலும் தமிழகத்தில் மழைக்கும் வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடலோரத் தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 7.6 கிமீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இந்த மழைப் பொழிவு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள்
மாவட்ட வாரியாக எதிர்பார்க்கப்படும் மழைப் பொழிவு விவரம்
நாளை (செப்டம்பர் 6) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் சென்னை வானிலை
அடுத்த சில நாட்களுக்கு உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் எனக் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.