PHH, PHH-AAY ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு: பிப்ரவரி 25க்குள் இதை முடிக்காவிட்டால் சிக்கல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) வைத்துள்ள அரிசி அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மிக முக்கியமான காலக்கெடுவை விதித்துள்ளன. இதன்படி, ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி அவகாசம் வரும் பிப்ரவரி 25, 2026 அன்று முடிவடைகிறது.
நடவடிக்கை
ஏன் இந்த நடவடிக்கை?
மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் சென்றடைவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர்கள் அல்லது ஊரில் இல்லாதவர்களின் பெயர்களில் சட்டவிரோதமாகப் பொருட்கள் வாங்கப்படுவதைத் தடுக்க இந்த சரிபார்ப்பு முறை உதவுகிறது. அரசின் இலவச அரிசி மற்றும் இதர பொருட்கள் தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்குச் சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை இது உறுதி செய்யும்.
பாதிப்புகள்
பிப்ரவரி 25 க்குள் செய்யத் தவறினால் ஏற்படும் பாதிப்புகள்
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாதவர்களுக்குக் கீழ்க்கண்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது: குடும்ப அட்டையில் பெயர் இருந்தும், நீண்ட நாட்களாகச் சரிபார்ப்பு செய்யாதவர்களின் பெயர்கள் தானாகவே நீக்கப்படலாம். பெயர் நீக்கப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 5 கிலோ கூடுதல் அரிசி உள்ளிட்ட இதர பொருட்களின் அளவு குறைக்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் யாருமே சரிபார்ப்பு செய்யாத பட்சத்தில், அந்த ரேஷன் கார்டே தற்காலிகமாக முடக்கப்படவும் வாய்ப்புள்ளது.
தகுதியுள்ளவர்கள்
பதிவு செய்யும் முறை மற்றும் தகுதியுள்ளவர்கள்
இந்த அறிவிப்பு முக்கியமாக அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தும். குடும்பத் தலைவர் மட்டுமல்லாது, கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருமுறையாவது நியாயவிலைக் கடைக்குச் சென்று ரேகை பதிவு செய்ய வேண்டும். உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையுடன் அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று விற்பனையாளரிடம் பயோமெட்ரிக் பதிவு செய்யக் கோரலாம். நீங்கள் சொந்த ஊரில் இல்லாவிட்டாலும், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தின் கீழ் தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள எந்தவொரு ரேஷன் கடையிலும் இந்தச் சரிபார்ப்பை செய்துகொள்ளலாம். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க இப்போதே உங்கள் ரேஷன் கடைக்கு சென்று சரிபார்ப்பை முடித்துவிடுவது நல்லது.