வில்லங்கச் சான்றிதழ் போலவே இனி பட்டா வரலாற்றையும் அறியலாம்; தமிழக அரசின் புதிய திட்டம்
செய்தி முன்னோட்டம்
சொத்து தொடர்பான உரிமையாளர் விவரங்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், வில்லங்கச் சான்றிதழைப் (Encumbrance Certificate - EC) போலவே பட்டாவின் முழுமையான வரலாற்றை அறிந்துகொள்ளும் புதிய ஆன்லைன் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 'பட்டா வரலாறு' (Patta History) என அழைக்கப்படும் இந்தச் சேவை, பத்திரப்பதிவுத் துறையின் உடனடிப் பட்டா மாறுதல் நடைமுறையைத் தொடர்ந்து, வருவாய்த் துறையின் ஆவணங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
சேவை
சேவையின் முக்கிய அம்சங்கள்
பொதுவாக, வில்லங்கச் சான்றிதழ் ஒரு சொத்தின் மீதான பரிமாற்றங்கள், அடமானம் மற்றும் சட்டச் சிக்கல்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும். ஆனால், பட்டாவில் இந்த விவரங்கள் முழுமையாக இருக்காது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், புதிய 'பட்டா வரலாறு' சேவையின் மூலம், பொதுமக்கள் பின்வரும் விவரங்களை அறிந்துகொள்ள முடியும்: குறிப்பிட்ட நிலத்தின் முந்தைய பட்டா உரிமையாளர்களின் பெயர்கள். பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தேதி மற்றும் அதற்குரிய ஆணை எண். பட்டா எந்தெந்த காலகட்டத்தில் யாரிடம் இருந்தது போன்ற விவரங்கள்.
நடைமுறை
நடைமுறை மற்றும் கட்டணம்
இந்தச் சேவை முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் ஒரு தாலுகாவில் தொடங்கப்பட உள்ளது. சோதனை வெற்றியடைந்தால், தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். பொதுமக்கள் இந்த 'பட்டா வரலாறு' சேவையைப் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில், இந்த வசதியை 2014 ஆம் ஆண்டு முதல் இருந்த பட்டா வரலாற்றை மட்டுமே அறிந்துகொள்ளும் வகையில் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பட்டா வாங்குதல் மற்றும் மாற்றுதல் தொடர்பான பணிகள் ஆன்லைன் மூலம் எளிமையாக்கப்பட்ட பிறகு, சொத்து உரிமைகளைப் பற்றி முழுமையான தகவல்களைப் பெற பொதுமக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.