மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள்
காஜா மொய்தீன் என்னும் மருத்துவர் சிறுநீ ரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து சிறுநீரகம் பெற முடியாத காரணத்தினால் அவருக்கு ராமாயி என்பவர் சிறுநீரகம் வழங்க முனைவந்துள்ளார். ஆனால் அந்த அறுவை சிகிச்சையினை செய்ய தமிழ்நாடு மருத்துவமனைகள் அனைத்தும் மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் காஜா மொய்தீன் கேரளா-கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தமிழகத்திலிருந்து அறுவை சிகிச்சைக்கான சான்றிதழ் வாங்கிவரும் படி கூறியுள்ளனர். அதன்படி தனக்கு தடையில்லா சான்றிதழ் கோரி மருத்துவர் காஜா மொய்தீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது.
அடுத்த 4 வாரத்தில் தகுந்த உத்தரவினை பிறப்பிக்க அங்கீகார குழுவுக்கு உத்தரவு
அப்போது உடல் உறுப்புத்தானம் உறவினர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று கூறப்படாத நிலையில் பல உயிர்களை காத்த மருத்துவர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார் என வேதனை தெரிவித்துள்ளார். உறவினர்கள் அல்லாதோரும் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான வழிவகை சட்டத்திலுள்ள நிலையில், தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அறுவைச்சிகிச்சை செய்ய மறுத்தது சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து அடுத்த ஒருவாரத்தில் மருத்துவர்.காஜா மொய்தீன் மற்றும் அவருக்கு உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ள நபரும் மருத்துவக்குழு முன் ஆஜராகவேண்டும். அவர்களிடம் கோவை வட்டாட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை சட்ட விதிகளின்கீழ், அதற்கான அங்கீகாரக்குழுவுக்கு அறிக்கையளிக்கவேண்டும். அந்த அறிக்கைமீது அடுத்த 4 வாரத்தில் அங்கீகாரக்குழு தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.