
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை
செப்டம்பர் 17 மற்றும் 18 அன்று கனமழைக்கு வாய்ப்பு
செப்டம்பர் 17 அன்று, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 18 அன்று, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14 முதல் 18 வரை, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.