LOADING...
கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 11 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
தமிழக கிராமக் கோயில் பூசாரிகளுக்கு 11 மெகா அறிவிப்புகள்

கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 11 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2026
05:49 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திடலில் இன்று (பிப்ரவரி 28, 2026) நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கிராமக் கோயில் பூசாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 11 முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். குறிப்பாக, ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வரும் 19,000 திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

ஓய்வூதிய உயர்வு

வாரிசுதாரர் நிதி மற்றும் ஓய்வூதிய உயர்வு

பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஈமச்சடங்கு நிதியுதவி 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ஏற்கனவே 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பணியின் போது இயற்கை எய்தும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திருமண நிதியுதவி

கல்வி மற்றும் திருமண நிதியுதவி உயர்வு

பூசாரிகளின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கல்வி நிதியுதவியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: பள்ளிக்கல்விக்கான நிதி உதவி 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டு, இப்போது 2,000 முதல் 2,500 ரூபாய் வரை வழங்கப்படும். உயர்கல்வியைப் பொறுத்தவரை இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளுக்கான ஆண்டு நிதியுதவி தலா 2,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. திருமண நிதியைப் பொறுத்தவரை பூசாரி, அவரது மகன் மற்றும் மகளின் திருமணத்திற்கான நிதியுதவியில் கூடுதலாக 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

Advertisement

பயிற்சித் திட்டங்கள்

கூடுதல் சலுகைகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பூசாரிகளுக்குப் புத்தாடை வழங்கப்படும் என்றும், மூக்குக்கண்ணாடி வாங்குவதற்கான நிதி 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். மேலும், ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்குப் பெரிய திருக்கோயில்கள் மூலம் புத்தொளிப் பயிற்சி அளிக்கப்படும். அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement