பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது: மாற்று இடத்தைத் தேடும் தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சென்னைக்கான இரண்டாவது புதிய பசுமை வழி விமான நிலைய திட்டத்தை முற்றிலும் கைவிடுவதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக ஆற்றல் வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பரந்தூர் திட்டத்தை கைவிட்டுவிட்டு அதற்கு பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்வதற்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நீர்நிலை
விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் அழிக்க முடியாது: அமைச்சர்
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில்,"தமிழக அரசு மாநிலத்தின் வளர்ச்சியை முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், அதே வேளையில் ஆண்டுக்கு மூன்று முறை முப்போகம் விளையும் வளமான விவசாய நிலங்களையும், வாழ்வாதாரமாக விளங்கும் நீர்நிலைகளையும் அழித்து இந்த விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதிக்காது" என்றார். "முதலமைச்சர் விஜய் முதல் களப் போராட்டமே இந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகத்தான் தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கு எதிரான எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முதலமைச்சருடன் கலந்தாலோசித்து, சென்னைக்குத் தேவையான இரண்டாவது விமான நிலையத்திற்குப் பொருத்தமான மாற்று இடம் விரைவில் கண்டறியப்படும்."
போராட்டம்
1,000 நாட்களை தாண்டிய ஏகனாபுரம் போராட்டம்
பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில், 27,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பிரம்மாண்ட விமான நிலையம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. இதற்காக 'சிறப்புத் திட்டம்' என்ற அந்தஸ்தும் வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இருப்பினும், 1,000 குடும்பங்களுக்கு மேல் இடம்பெயர வேண்டிய சூழல், நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்கள் அழிக்கப்படும் ஆபத்து ஆகியவற்றைக் கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கடந்த 1,000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு, தற்போதைய முதலமைச்சர் விஜய் பரந்தூர் பகுதிக்கு நேரில் சென்று போராட்டக் குழுவினரைச் சந்தித்துத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டம்
நிலம் கொடுத்தவர்களின் நிலை என்ன?
வருவாய்த்துறை அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தாலுகாக்களுக்கு உட்பட்ட 12 கிராமங்களில் இருந்து இதுவரை சுமார் 1,700 ஏக்கர் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நில உரிமையாளர்களில் 90% பேருக்கு ஏற்கனவே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள தொகை வழங்கும் பணிகள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலைய திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் அடுத்தகட்ட நிலை குறித்து அரசு விரைவில் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.