SIR விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது இனி ரொம்ப சுலபம்; ஆன்லைனில் வீட்டிலிருந்தே செய்வது செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டில், வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவும், புதுப்பிக்கவும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (Special Intensive Revision - SIR) தொடங்கியுள்ளது. இந்தப் பணிக்காக வாக்காளர்கள் தங்களின் ஆவணங்களை இதுவரை நேரில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டிய சூழல் இருந்த நிலையில், தற்போது அவற்றை ஆன்லைனிலும் சமர்ப்பிக்கும் வசதியைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பணியின் ஒரு பகுதியாகத் தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் அதேவேளையில், வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாகவும் தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஆன்லைன்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை
வாக்காளர்கள் தமிழக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in என்ற பக்கத்தை அணுக வேண்டும். அதில், வலதுபுறத்தில் உள்ள Fill Enumeration Form என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்து, தங்களது மொபைல் எண் மற்றும் EPIC எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை மொபைல் எண் வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்படாமல் இருந்தால், முதலில் படிவம் 8ஐ (Form 8) பூர்த்தி செய்து இணைக்க வேண்டும். இதற்கு ஒருசில நிமிடங்கள் மட்டுமே ஆகும். SIR படிவத்தைப் பூர்த்தி செய்ய, வாக்காளர்கள் தங்கள் EPIC எண்ணைப் பதிவிட்டுத் தங்கள் விவரங்களைத் திரையில் கண்டறியலாம்.
2002 வாக்காளர் பட்டியல்
2002 வாக்காளர் பட்டியல் விபரங்கள்
2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் முதல் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, 2002 விவரங்களைப் பயன்படுத்தித் தேடி, சரியான விவரங்களைப் பூர்த்தி செய்து முகவரி விவரங்களுடன் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். 2002 வாக்காளர் பட்டியலில் உறவினர் பெயர் இருந்தால் இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, பெற்றோர் அல்லது உறவினரின் 2002 விவரங்களைப் பயன்படுத்திச் சமர்ப்பிக்கலாம். 2002 வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாவிட்டால் மூன்றாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, தங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படத்தை மட்டும் பதிவேற்றிச் சமர்ப்பிக்கலாம். இந்த வசதி மூலம், பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலைத் திருத்துதல் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது போன்ற பணிகளை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும்.