LOADING...
மே 4 வாக்கு எண்ணிக்கை: எந்தச் சூழலில் தேர்தல் முடிவுகள் நிறுத்தப்படும்? மறு எண்ணிக்கை கோருவதற்கான சட்ட விதிகள்
தேர்தல் வாக்கு எண்ணிக்கை விதிகள் மற்றும் முடிவுகள் நிறுத்தப்பட வாய்ப்புள்ள முக்கிய காரணங்கள்

மே 4 வாக்கு எண்ணிக்கை: எந்தச் சூழலில் தேர்தல் முடிவுகள் நிறுத்தப்படும்? மறு எண்ணிக்கை கோருவதற்கான சட்ட விதிகள்

எழுதியவர் Sekar Chinnappan
May 01, 2026
04:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இந்தப் பணிகள் வெளிப்படையான முறையில் நடைபெறும். ஜனநாயகத்தின் மிக முக்கியமான இந்த நாளில், தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றி அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுவதற்கான அடிப்படை காரணங்கள்

வாக்கு எண்ணிக்கை தடையின்றி நடைபெற வேண்டும் என்றாலும், சில அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் அதனை நிறுத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ அதிகாரம் உண்டு. ஒரு குறிப்பிட்ட மின்னணு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு முடிவுகளைப் பெற முடியாத சூழல் உருவானால் அந்தப் பெட்டியின் எண்ணிக்கை மட்டும் நிறுத்தப்படும். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வன்முறை வெடித்தாலோ அல்லது இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ பணிகள் உடனடியாக நிறுத்தப்படும். முறைகேடு அல்லது பூத் கைப்பற்றல் புகார்கள் உறுதி செய்யப்பட்டால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்படலாம்.

அதிகாரம்

மறு வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் அதிகாரியின் அதிகாரம்

வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் திருப்தி இல்லையெனில், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் விதிகள் 1961, விதி 63-ன் கீழ் மறு எண்ணிக்கை கோரி முறையாக விண்ணப்பிக்கலாம். வெறுமனே தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இதனைத் கோர முடியாது. தகுந்த ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். மறு எண்ணிக்கை கோரிக்கையை ஏற்பதும் நிராகரிப்பதும் தேர்தல் நடத்தும் அலுவலரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. பொதுவாக, வெற்றி தோல்வி வித்தியாசம் மிகக் குறைவாக (உதாரணமாக 100 வாக்குகள்) இருக்கும்போது, மறு எண்ணிக்கைக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு.

Advertisement

தேர்தல் செலவு கணக்கு

வெற்றிச் சான்றிதழ் மற்றும் தேர்தல் செலவு கணக்கு விதிகள்

வெற்றி பெற்ற வேட்பாளருக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர் படிவம் 21C என்ற அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழை வழங்குவார். இதுவே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அத்தாட்சி. வெற்றி பெற்றாலும், அடுத்த 30 நாட்களுக்குள் தனது தேர்தல் செலவு கணக்குகளை முறையாக ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் வெற்றி செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் பிறகு, ஆளுநர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பின்னரே ஒரு வேட்பாளர் முழுமையான சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட முடியும்.

Advertisement