விஜய் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு! செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு; முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களின் முழு லிஸ்ட்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, முதலமைச்சர் விஜய் பொதுமக்கள், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, காவல்துறை மற்றும் உள்துறை ஆகிய மிக முக்கியத் துறைகளைத் தன்வசம் வைத்துள்ளார். இது தவிர, சிறப்புத் திட்ட அமலாக்கம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல், மகளிர் நலன், இளைஞர் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைகளையும் அவரே வழிநடத்தவுள்ளார். பதவியேற்ற முதல் நாளே 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான சிறப்புப் பிரிவுகளை அமைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்ட விஜய், இந்தத் துறைகளின் மூலம் தனது நிர்வாகத்தை நேரடியாகக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளார்.
செங்கோட்டையனுக்கு நிதித்துறை
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிதித்துறை
கடந்த 2025 நவம்பர் மாதம் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனுக்கு, இந்த அமைச்சரவையில் மிக முக்கியமான நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவெகவின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அவருக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகவும், ஜாக்பாட்டாகவும் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை போன்ற முக்கியத் துறைகளை அரசு நிர்வாகத்தில் கையாண்ட அனுபவம் கொண்ட செங்கோட்டையன், புதிய அரசின் நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகளைத் திறம்பட வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் இந்தத் துறை அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய முதலமைச்சருக்கு நிர்வாக ரீதியாக வழிகாட்ட ஒரு அனுபவமிக்க மூத்த அமைச்சர் நிதித்துறையில் இருப்பது அரசாங்கத்திற்குப் பெரும் பலமாக அமையும்.
ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண் ராஜ்
கட்சியின் முக்கியத் தூண்களுக்கு ஒதுக்கப்பட்ட பவர்ஃபுல் இலாகாக்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான என். ஆனந்துக்கு, கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று, விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆதவ் அர்ஜுனாவிற்குப் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பொறுப்பு, மருத்துவரான அருண் ராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஆரம்பக்காலத் தூண்களாகவும், தேர்தல் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர்களாகவும் இருக்கும் இவர்களுக்கு இந்த முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
வெங்கட்ரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன்
மின்சாரம், கல்வி மற்றும் உணவுத் துறைகளைக் கைப்பற்றிய புதிய அமைச்சர்கள்
கட்சியின் பொருளாளரான பி. வெங்கட்ரமணனுக்கு, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான உணவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தவெகவின் மற்றொரு முக்கிய முகமான சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு, மின்சாரம் மற்றும் சட்டத்துறை வழங்கப்பட்டுள்ளது. எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ்மோகனுக்கு, தமிழகத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரபு மற்றும் கீர்த்தனா
இயற்கை வளங்கள் மற்றும் தொழில்துறையைக் கவனிக்கும் இளம் அமைச்சர்கள்
அமைச்சரவையின் இளம் முகங்களான டி.கே. பிரபு மற்றும் செல்வி எஸ். கீர்த்தனா ஆகியோருக்கும் முக்கியமான துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. டாக்டர் டி.கே. பிரபுவிற்கு இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மாநிலத்தின் கனிம வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள சூழலில், செல்வி எஸ். கீர்த்தனாவிற்குத் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொழில்துறை அமைச்சராகக் கீர்த்தனா எடுக்கும் நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING || த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு
— Polimer News (@polimernews) May 16, 2026
=> முதலமைச்சர் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், இளைஞர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை
=> ஆனந்த் - ஊரக…