LOADING...
தமிழக தேர்தல் முடிந்தும் ஏன் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகாது? பின்னணி இதோ
'எக்ஸிட் போல்' முடிவுகளுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

தமிழக தேர்தல் முடிந்தும் ஏன் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகாது? பின்னணி இதோ

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2026
06:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிந்தவுடன் வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எனப்படும் 'எக்ஸிட் போல்' முடிவுகளுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வழக்கமாக வாக்குப்பதிவு முடிந்த 30 நிமிடங்களில் வெளியாகும் இந்த முடிவுகள், இன்று வெளியாகாது என்பது பலருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இதற்கான முக்கியக் காரணத்தைத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் விளக்குகின்றன.

வாக்குப்பதிவு

மதிய நிலவரப்படி 70 சதவீத வாக்குப்பதிவு

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 70 சதவீதத்தைத் தொட்டுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகக் களம் காண்பது மற்றும் நான்கு முனைப் போட்டி நிலவுவதால், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நீடிக்கும் நிலையில், மக்கள் திரளாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

எக்ஸிட் போல்

ஏன் இன்று எக்ஸிட் போல் வெளியாகாது?

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒரு தேர்தல் பல கட்டங்களாக அல்லது பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படும்போது, அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்த பிறகே கருத்துக்கணிப்புகளை வெளியிட வேண்டும். தற்போது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இன்றுடன் தேர்தல் முடிந்தாலும், மேற்கு வங்கத்தில் இன்னும் ஒரு கட்டத் தேர்தல் எஞ்சியுள்ளது.

Advertisement

காலதாமதம்

மேற்கு வங்க தேர்தலும் காலதாமதமும்

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், இன்று முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது மற்றொரு மாநிலத்தின் கருத்துக்கணிப்பை வெளியிடுவது வாக்காளர்களின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஏப்ரல் 29 வரை எக்ஸிட் போல் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வெளியீடு

எப்போது வெளியாகும் கருத்துக்கணிப்பு தேர்தல் முடிவுகள்?

வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேற்கு வங்கத்தின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடையும். அதன் பிறகு, சரியாக மாலை 6.30 மணிக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய அனைத்து மாநிலங்களுக்குமான எக்ஸிட் போல் முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியாகும். அதுவரை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் நான்கு முனைப் போட்டியில் வெல்லப்போவது யார் என்பது குறித்த முதற்கட்டச் சித்திரம் அன்றைய தினம் தெளிவாகத் தெரியவரும்.

Advertisement