தமிழக தேர்தல் விறுவிறுப்பு: 9 மணிக்கே 17.69% வாக்குப்பதிவு! 2021-ஐ விட இம்முறை அதிகமா?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காலை 9 மணி நிலவரப்படி சுமார் 13.80% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஆனால், இந்த முறை அதே நேரத்தில் 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்திலேயே 1 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே வாக்களித்துவிட வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் இதில் பிரதிபலிக்கிறது.
நிலவரம்
மாவட்ட வாரியான நிலவரம்: முதலிடத்தில் திருப்பூர்
தமிழகத்திலேயே அதிகபட்சமாகத் திருப்பூர் மாவட்டத்தில் 20.38 சதவீத வாக்குகள் காலை 9 மணிக்குள் பதிவாகியுள்ளன. சுமார் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு 20 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. மற்ற முக்கிய மாவட்டங்களின் நிலவரம் வருமாறு: நாகப்பட்டினம்: 17.51% செங்கல்பட்டு: 17.17% அரியலூர்: 16.82% திருநெல்வேலி: 15.96% கடலூர்: 14.84%
போட்டி
நான்கு முனைப் போட்டியும் மக்களின் எழுச்சியும்
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்களின் விதியைத் தீர்மானிக்க 5.73 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்கள் அதிகாலையிலேயே ஆர்வமுடன் வந்து வாக்களிப்பது இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் புதிய உச்சத்தைத் தொடும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. காலை முதலே அஜித், விஜய் போன்ற திரைப்பிரபலங்கள் வாக்களித்தது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்