அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பெருமாள் பட்டியை சேர்ந்த குருசாமி, ஈஸ்வரி தம்பதியின் மகன் பிரவீன். இவரும் திருச்சி மனப்பாறையை சேர்ந்த தமிழ்செல்வியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அமெரிக்காவில் வசித்து வந்த இவர்களுக்கு மிலன் என்னும் அழகான குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் 2ம்தேதி பிரவீன்குமார், தமிழ்செல்வி தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். அதன்பின்னர் 10 நாட்கள் கழித்து அவர்கள் இருவரது உடல்களும் சொந்தஊருக்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் குழந்தை அந்நாட்டு உரிமைபெற்ற காரணத்தினால் இந்தியாவிற்கு கொண்டுவரச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் குழந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. உரிய அனுமதிபெற்று குழந்தையை அழைத்து செல்லுங்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதையடுத்து, தமிழ்செல்வியின் தங்கை கிளம்பி அமெரிக்கா சென்றுள்ளார்.
தமிழ் அமைப்புகள் உதவ முன்வரவேண்டும் என வேண்டுகோள்
அங்குசென்ற பின்னர்தான் குழந்தையை அமெரிக்காவில் வசிக்கும் வடமாநில தம்பதியினர் தற்காலிகமாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் என்னும் அதிர்ச்சிச்செய்தி அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்ட நிலையில் அந்த வடமாநில தம்பதியினர் குழந்தை தமிழ்நாட்டுக்கு, தனது தாத்தா பாட்டி ஊருக்கு சென்றால் அங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று வாதிட்டனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் மிலனின் தாத்தாப்பாட்டி ஊருக்கு நேரில்சென்று ஒரு குழு ஆய்வுசெய்து அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையினை அமெரிக்க குழந்தைப்பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்த நிலையிலும் வடமாநில தம்பதியினர் தொடர்ந்து சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார்கள். ஒரு வருடமாக நீடிக்கும் இந்த சிக்கலைத்தீர்க்க அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகள் முன்வரவேண்டும் என அந்த குழந்தையின் குடும்பம் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.