மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல்
மணிப்பூர் கலவரத்தின் போது பெண்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட பல வன்கொடுமைகள் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிப்பூரை சேர்ந்த ஒரு 19 வயது பழங்குடியின பெண் தனக்கு நடந்த வன்முறை குறித்து NDTV செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்திருக்கிறார். மே 15ஆம் இரண்டாவது வாரம் ATMக்கு சென்றிருந்த தன்னை ஒரு ஆண்கள் கும்பல் கடத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு மலைப் பகுதிக்கு அவர்கள் தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு மூன்று பேர் மாறி மாறி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அந்த பழங்குடியின பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தவிர, தான் துப்பாக்கியால் தாக்கப்பட்டதாகவும், உணவு மற்றும் தண்ணீர் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோஹிமாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
"என்னை நான்கு பேர் வெள்ளை நிற பொலேரோவில் அழைத்துச் சென்றனர். அவர்கள் என்னை அழைத்துச் செல்லும் போதே, டிரைவரைத் தவிர, அங்கிருந்த மூன்று பேரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்." என்று அவர் கூறியுள்ளார். அதற்கு அடுத்த நாள் காலையில், அவர் அங்கிருந்த ஆண்களிடம் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிக்கொண்டிருந்த தனக்கு ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் உதவி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து, ஜூலை 21 ஆம் தேதி தான் காவல்துறையில் புகார் அளிக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.