3வது மொழியை 5 ஆம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துங்கள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை! காரணம் இதுதான்
செய்தி முன்னோட்டம்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 9 ஆம் வகுப்பு மட்டத்தில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் தற்பொழுது தனது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை தேவையின்றி அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்துள்ள நீதிமன்றம், புதிய மொழியைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கு அதனை 5 அல்லது 6 ஆம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துவதே சரியானது என்று மத்திய அரசுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளது.
மன அழுத்தம்
மாணவர்களின் மனஅழுத்தத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமர்வு
நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தது.
மத்திய அரசின் வழக்கறிஞரை நோக்கிப் பேசிய நீதிபதி நாகரத்னா, "மத்திய அரசு தயவுசெய்து 9 ஆம் வகுப்பு மட்டத்தில் மூன்றாவது மொழியைக் கொண்டு வர வேண்டாம்.
இது மாணவர்களின் மனஅழுத்தத்தை வீணாக உயர்த்தும். நீங்கள் ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்த விரும்பினால், அதை 5 அல்லது 6 ஆம் வகுப்பு மட்டத்தில் செய்யுங்கள், 9 ஆம் வகுப்பில் செய்ய வேண்டாம்.
8 ஆம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்குப் படிப்பின் அழுத்தம் தொடங்கிவிடுகிறது." என்று கூறி, நீதிமன்றத்தின் இந்த உணர்வை அரசுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு
தமிழக அரசின் நவோதயா பள்ளி வழக்கு பின்னணி
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தபோதே இந்த விவாதங்கள் எழுந்தன.
நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் இந்த மும்மொழிக் கொள்கை காரணமாகவே, தமிழக அரசு மாநிலத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ புதிய கொள்கை மீதான நீதிமன்றத்தின் கண்காணிப்பு
இந்த அமர்வு தற்பொழுது சிபிஎஸ்இயின் புதிய மொழிக் கொள்கை தொடர்பான வழக்கை நேரடியாக விசாரிக்கவில்லை என்றாலும், பள்ளிகளில் மூன்றாவது மொழி அறிமுகப்படுத்தப்படும் கால நேரம் குறித்து இந்த முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அதே வேளையில், சிபிஎஸ்இயின் இந்த புதிய கொள்கைக்கு எதிரான மேல்முறையீடுகளை தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மற்றொரு உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கனவே விசாரித்து வருகிறது என்பதும், சமீபத்தில் இந்த புதிய அறிவிப்பிற்குத் தடை விதிக்க அந்த அமர்வு மறுத்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.