நகரங்களுக்கு பெயர் மாற்ற கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
"படையெடுப்பாளர்களின்" பெயரால் அழைக்கப்படும் நகரங்கள் மற்றும் வரலாற்று இடங்களின் பெயரை மாற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(பிப் 27) தள்ளுபடி செய்தது. பொதுநல மனுவின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கிய நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அந்த மனுவை நிராகரித்துள்ளது. மனுதாரர் குறிப்பிட்ட கடந்த காலத்தை மட்டும் மதிப்பாய்வு செய்கிறார் என்றும், முழு கலாச்சாரத்தையும் "காட்டுமிராண்டித்தனம்" என்று முத்திரை குத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்து மதம் ஒரு மிகசிறந்த மதம். அது பாகுபாட்டை அனுமதிக்காது என்றும் நீதிமன்றம் கூறி இருக்கிறது.
இந்து மதத்தில் மதவெறி இல்லை: உச்ச நீதிமன்றம்
நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய வேறு பல முக்கிய பிரச்சனைகள் இருப்பதாக நீதிபதி நாகரத்னா கூறியுள்ளார். "இந்து மதம் வெறும் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. இந்து மதம் ஒரு வாழ்க்கை முறை. அதனால், இந்து மதத்தில் எந்த மதவெறியும் இல்லை" என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. "கடந்த காலத்தை தோண்டி எடுக்காதீர்கள், அது ஒற்றுமையின்மையை மட்டுமே உருவாக்கும். நாட்டை கொதிநிலையில் வைத்திருக்க முடியாது" என்று நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது. மனுதாரர் தனது மனுவில், கடந்த காலங்களில் "காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களால்" மறுபெயரிடப்பட்ட நகரங்களின் கலாச்சாரம் வாய்ந்த உண்மையான பெயர்களை வைக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.