நாடு முழுவதும் இனி ஒரே அவசர உதவி எண் '112': 3 மாதங்களில் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் விபத்துக்கள் அல்லது மருத்துவ அவசரக் காலங்களில் வெவ்வேறு எண்களைத் தொடர்புகொள்வதில் நிலவும் குழப்பங்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள காவல்துறைக்கான 100, தீயணைப்புக்கான 101, ஆம்புலன்ஸிற்கான 102, 108 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான 1091 ஆகிய அனைத்து எண்களையும் ஒரே ஒற்றை எண்ணாக மாற்ற வேண்டும். இந்த அனைத்து அவசர உதவி எண்களையும் '112' என்ற ஒரே ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண்ணின் கீழ் கொண்டு வந்து, அதனை அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாகச் செயல்பாட்டிற்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவசர சிகிச்சை விழிப்புணர்வு
சிகிச்சத் தாமதம் உயிர்வாழும் வாய்ப்பைக் குறைக்கும் என நீதிபதிகள் அமர்வு கடுமையான எச்சரிக்கை
'சேவ்லைப் பவுண்டேஷன்' என்ற சாலைப் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ்.சந்தூர்கர் அமர்வு, அவசர சிகிச்சை என்பது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21ன் கீழ் வாழ்வுரிமையுடன் நேரடித் தொடர்புடையது என்றனர். கடுமையான விபத்துக்களின் போது பாதிக்கப்படுபவர்கள் பெரும் அதிர்ச்சியில் இருப்பதால், அவசரச் சிகிச்சையில் ஏற்படும் ஒவ்வொரு நொடித் தாமதமும் ஒரு மனிதனின் உயிர்வாழும் வாய்ப்பைக் கணிசமாகக் குறைத்துவிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதற்கென அனைத்து மாநில அரசுகளும் தங்களது முன்னேற்ற விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதற்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் நவீனமயமாக்கல்
ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் தேசிய அளவிலான புதிய மருத்துவ மீட்பு நெறிமுறை
இதனுடன், நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களையும் 'AIS-125' என்ற தேசியப் பாதுகாப்புத் தரத்திற்கு ஏற்ப உடனடியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு அவசரக் காலக் குழுவினர் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்ய, அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் ஜிபிஎஸ் (GPS) வாகனக் கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டு '112' நெட்வொர்க்குடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், விபத்தில் சிக்கியோருக்கு உதவ நினைக்கும் பொதுமக்களுக்குப் போலீஸ் விசாரணை மற்றும் நீதிமன்ற அலைச்சல்களால் ஏற்படும் சட்ட ரீதியான பயங்களைப் போக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.