ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கை எதிர்த்து பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று(பிப் 7) தள்ளுபடி செய்தது. இது கோவிட்-19 மற்றும் பிற நிவாரணங்களை வழங்குவதற்காக அய்யூப், க்ரூட் ஃபண்டிங் தளமான கெட்டோ மூலம் பணம் திரட்டி மோசடி செய்தது தொடர்பான வழக்காகும். ராணா அய்யூப் பணமோசடி செய்ததாக முதலில் அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து காசியாபாத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்ற மனுவின் மூலம் அய்யூப், காசியாபாத் நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கேள்விக்குட்படுத்தி இருந்தார். இந்த வழக்கின் விசாரணையை அமலாக்க இயக்குநரகத்தின்(ED) டெல்லி பிரிவு மட்டுமே மேற்கொண்டதாகவும், பணம் நவிமும்பையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அய்யூப்பின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
பணமோசடியின் 6 செயல்முறைகள்
நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, அய்யூப்பின் வாதத்தை நிராகரித்து, "PMLAவின் 3வது பிரிவின் கீழ், ஆறு செயல்பாடுகள் அல்லது செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டால், அது பணமோசடி என்று கருதப்படும்." என்று கூறியுள்ளது. மறைத்தல், உடைமை, கையகப்படுத்தல், பயன்படுத்துதல், கறைபடியாத சொத்தாக முன்னிறுத்துதல், கறைபடியாத சொத்து என்று கூறுதல் ஆகியவை அந்த ஆறு செயல்முறைகளாகும். "வங்கிக் கணக்கு அமைந்துள்ள நவி மும்பை, குற்றத்தின் வருமானம் சென்றடையும் இடமாகும். ஆறு நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை நடந்ததா என்ற கேள்வி ஆதாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியம்" என்பதால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.