கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாருக்கு எதிரான 2018 பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு வரி ஏய்ப்பு மற்றும் பல கோடி மதிப்புள்ள ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் தொடர்பானதாகும்.
இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை அமலாக்க இயக்குனரக(ED) அதிகாரிகள் செப்டம்பர் 2019இல் கைது செய்தனர்.
டெல்லி உயர்நீதிமன்றம் அதற்கு அடுத்த மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
அப்போது, இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டிய சிவக்குமார், நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
உச்ச நீதிமன்றம்
டி.கே.சிவகுமாரிடம் இருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதாக தகவல்
2017ஆம் ஆண்டு டி.கே.சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவருக்கு எதிரான ED இன் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனைகளில் கிட்டத்தட்ட ₹ 300 கோடி மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பணத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி சிவக்குமார் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த குற்றம் வராது என்று கூறியுள்ளது.
திட்டமிடப்பட்ட சதிகளுக்கு மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.