கரூர் விவாகரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுகவுக்கு குட்டு; முதல்வர் விஜய் கரூர் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை
செய்தி முன்னோட்டம்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரையின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கரூர் விபத்திற்கு அப்போதைய திமுக அரசே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தற்பொழுது சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும் எனக் கோரி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதிருப்தி
உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்
இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் முன் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, திமுக தரப்பு வாதங்களைக் கேட்டு கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், திமுக வழக்கறிஞரை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். "கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திமுக அரசு பதிவு செய்த FIR-ல் தற்போதைய முதல்வர் விஜய்யின் பெயர் சேர்க்கப்படவே இல்லை. அப்படி இருக்கும்போது அவர் கரூர் செல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?" "கரூர் விவகாரம் குறித்து விஜய்யும் அமைச்சர்களும் பேசக் கூடாது எனக் கோருவதன் மூலம், நாட்டின் அடிப்படை உரிமையான பேச்சுரிமைக்குதடை விதிக்கக் கோருகிறீர்களா? ஆவணங்களை முழுமையாகப் படிக்காமலேயே திமுக வழக்கறிஞர் வாதிடுகிறாரா?" எனக்கேள்வி எழுப்பியது.
எச்சரிக்கை
"அரசியல் செய்ய வேண்டாம்": நீதிபதிகள் எச்சரிக்கை
"கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் தவெக அரசு வேலை வாய்ப்புகளை வழங்கினால், அது எந்த வகையில் சிபிஐ வழக்கை பாதிக்கக் கூடும்?" எனவும் நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. முதலமைச்சரின் பேச்சையெல்லாம் ஒழுங்குபடுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாமல் இங்கு அரசியல் செய்ய வேண்டாம் என்று திமுக தரப்பிற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை ஏன் தள்ளுபடி செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கேட்டதைத் தொடர்ந்து, வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பாமல் அதனைத் திரும்பப் பெற திமுக முடிவு செய்தது. இதையடுத்து இந்த மனுவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.