தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தால் 3 மாதங்களில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் நீதிமன்றத் தீர்ப்புகள் காலதாமதமாக வெளியாவதால் வழக்காடிகளுக்கு ஏற்படும் ஈடுகட்ட முடியாத இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதன்படி, நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களும் ஏதேனும் ஒரு வழக்கின் விசாரணையை முழுமையாக முடித்து அதன் தீர்ப்பை ஒத்திவைத்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அதனைப் பிரகடனப்படுத்த வேண்டும். ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புகள் வழங்க ஏற்பட்ட கடுமையான காலதாமதம் குறித்த வழக்கினை விசாரித்த போதே, உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி வழிகாட்டுதல்களைத் தேசிய அளவில் பிறப்பித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த அதிரடி உத்தரவுகளை நாடு முழுமைக்கும் பிறப்பித்துள்ளது.
ஜாமீன் மனுக்கள் மீதான விதிகள்
ஜாமீன் மனுக்கள் மீது அதே நாளில் தீர்ப்பு வழங்கவும் 24 மணி நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்றவும் ஆணை
தனிநபர் சுதந்திரம் சார்ந்த வழக்குகளில் மிக வேகமான முடிவுகள் தேவை என்பதை வலியுறுத்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அமர்வு, ஜாமீன் மனுக்கள் மீது அதே நாளில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றது. ஜாமீன்மனு மீதான தீர்ப்புகள் ஒத்திவைக்கப்பட்டால், அடுத்த நாளே முறைப்படி அறிவிக்கப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், உயர் நீதிமன்றங்கள் வழங்கும் அனைத்து வகையான தீர்ப்புகளும், அவை வாசிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அந்தந்த நீதிமன்றங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கட்டாயம் பதிவேற்றப்பட வேண்டும். எந்தத் தேதியில் ஒரு வழக்கின் முதன்மைத் தீர்ப்புப் பகுதி வாசிக்கப்படுகிறதோ, அந்தத் தேதியே அந்த வழக்கின் அதிகாரப்பூர்வ தீர்ப்புத் தேதியாகக் கருதப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
கைதிகள் உடனடி விடுதலை
கைதிகள் விடுதலை விபரங்களைச் சிறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கக் கீழ் நீதிமன்றங்களுக்குக் கட்டளை
நீதிமன்றங்களால் ஜாமீன் அல்லது தண்டனை நிறுத்திவைப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டவுடன், அந்த விபரங்கள் எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகச் சிறை அதிகாரிகளுக்கு முறைப்படி கம்யூனிகேட் செய்யப்பட வேண்டும். இதன் மூலம், வழக்கின் விசாரணைக்காலக் கைதிகள் அல்லது தண்டனை பெற்ற கைதிகள் ஜாமீன் ஆணை வெளியான அதேநாளில், அல்லது அதிகபட்சமாக அடுத்த நாளுக்குள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதேபோல், கீழ் நீதிமன்றங்களும் தங்களால் வழங்கப்படும் வழக்கமான ஜாமீன் உத்தரவுகள் குறித்த விபரங்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் நீதிகேட்டுத் தேடிவரும் முதன்மை நிறுவனங்களான உயர் நீதிமன்றங்களில் காலதாமதமின்றித் தீர்ப்பு வழங்குவது அவசியம் என்றும், இது எந்தவொரு நீதிபதியையும் காயப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல என்றும் கூறியுள்ளது.