யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி
பல்வேறு சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்கு வருவதாக தகவல்கள் வெளியானது. இதற்காக நேற்று பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் அவரது ரசிகர்களால் வைக்கப்பட்டு, அனுமதி இல்லாமல் வைத்ததால் போலீசாரால் அகற்றப்பட்டதுடன், நான்கு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் புதுப்பாளையம் பகுதியில் காரில் வரும் டிடிஎஃப் வாசனை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வாகனங்களை எடுத்து செல்லுமாறு போலீசார் பலமுறை கேட்டுக்கொண்டதுடன், ஒலிப்பெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்தனர்.
கூட்டம் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி
இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இயக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர், நிகழ்ச்சியை முடித்து புறப்பட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசனை வழியனுப்ப மீண்டும் இருசக்கர வாகனங்களில் ஒலி எழுப்பியவாறு அவரது ஆதரவாளர்கள் அதிவேகமாக சென்ற பொழுது, அண்ணா மேம்பாலம் அருகில் சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்த 200க்கும் மேற்பட்டவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.