தமிழகத்தில் தற்கொலைகளால் ஆன செலவு மட்டும் 30,000 கோடி
2021ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகளுக்கு சுமார் 30,000 கோடி செலவாகி இருக்கிறது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாகும் என்று ஐஐடி-மெட்ராஸின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலையால் ஏற்படும் ஒவ்வொரு இறப்புக்கும் 1.29 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலைக்கான சமூக-பொருளாதார செலவை மதிப்பிடுவதற்காக ஐஐடி-யின் மறுவாழ்வு பயோ இன்ஜினியரிங் ஆய்வகத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் ஆய்வறிக்கை நேற்று(மார் 15) சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநில அளவிலான பதிவேடை அறிமுகப்படுத்துதல், மாவட்ட மனநலத் திட்டங்களை வலுப்படுத்துதல், கொள்கைகள் மற்றும் சட்டங்களைத் தவிர கண்காணிப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் தற்கொலை தடுப்பு முயற்சிகளை எடுத்தல் போன்றவற்றை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
ஒரே ஆண்டில் 18,314 தற்கொலைகள்
இந்த ஆய்வில், அகால உயிரிழப்பு, சுகாதார சேவைகள், மரணம், உயிர் பிழைத்தவர்களுக்கு இருக்கும் உளவியல் தாக்கம் மற்றும் இழந்த உற்பத்தித்திறன் ஆகியவற்றால் ஏற்படும் செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளது. NCRBயின் படி, 2011ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் தற்கொலையினால் 16,927 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2019-ல் 13,493 ஆகக் குறைந்துள்ளது. அதன் பின், 2020-ல் 16,883-ஆக இருந்த தற்கொலைகள், 2021-ல் 18,925 ஆக அதிகரித்துள்ளது. அதே ஆண்டு, இந்தியாவில் 1.64 லட்சம் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் தற்கொலைகளால் தமிழக அரசிற்கு ஏற்பட்ட நேரடிச் செலவு 18,314 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரி வருவாயை இழப்பதனால் மட்டும் மாநிலத்திற்கு 60 சதவீதத்திற்கும் மேல் செலவாகி இருக்கிறது.