Page Loader
தேமுதிக கட்சியில் திடீர் மாற்றம்? விஜயகாந்த் மனைவி மற்றும் மகனுக்கு முக்கிய பொறுப்பு?
தேமுதிக கட்சியில் திடீர் மாற்றம் ? - விஜயகாந்த் மனைவி மற்றும் மகனுக்கு முக்கிய பொறுப்பு?

தேமுதிக கட்சியில் திடீர் மாற்றம்? விஜயகாந்த் மனைவி மற்றும் மகனுக்கு முக்கிய பொறுப்பு?

எழுதியவர் Nivetha P
Dec 14, 2023
11:22 am

செய்தி முன்னோட்டம்

தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து அவர் பூரண குணமடைந்தார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், கடந்த 11ம் தேதி அவர் வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பிய சில மணிநேரத்திலேயே அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 14ம் தேதி(இன்று)நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொள்வார் என்று கூறப்பட்ட நிலையில், திருவேற்காட்டில் தனியார் மண்டபத்தில் இக்கூட்டம் நடக்கிறது. இதில் இக்கட்சியின் உயர்மட்டக்குழு முதல் அடிப்படை தொண்டர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சி விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவிற்கு வழங்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பொதுக்குழு 

பிரேமலதாவிற்கு பதவி அளிக்கப்படுமா?

அதன்பேரில் அவருக்கு கட்சியில் துணை பொதுச்செயலாளர் அல்லது செயல் தலைவர் உள்ளிட்ட பதவிகளுள் ஏதேனையும் வழங்க வாய்ப்புள்ளது. தற்போதைய பொதுச்செயலாளரான எல்.கே.சுதீஷ் உடல்நலக்குறைவு காரணமாக கட்சி பணிகளிலிருந்து ஒதுங்கியுள்ளார் என்று கூறப்பட்டாலும், இவருக்கு மாற்றாக தற்போதுவரை அடிப்படை தொண்டராக நீடித்து களப்பணிகளை மேற்கொண்டு வரும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை முன்னிலைப்படுத்தும் திட்டம் என்றும் பேச்சுக்கள் உலா வருகிறது. இதற்கிடையே, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-திமுக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், கட்சி நலனுக்காக பாஜக'வுடன் கூட்டணி அமைக்க பிரேமலதா முயற்சி செய்கிறார் என்றும் தெரிகிறது. மொத்தத்தில், நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி கட்சியின் எழுச்சி குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.