பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது
பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை இன்று(ஜன 25) மாலை திரையிடுவதாக இருந்த இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளன்னர். இதனால் டெல்லியின் புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு, ஃபேஸ்புக்கில் திரையிட இருப்பதாக அறிவித்தது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரிகள் வளாகத்தில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத கூட்டங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருந்தனர். இந்நிலையில், நீலநிற கவசங்கள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளுடன் பல்கலைக்கழக வாயிலுக்கு வேனில் வந்த காவல்துறையினர் இந்த மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
பல்கலைக்கழகங்களில் தொடரும் ஆவணப்பட திரையிடல்
2002 கலவரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படத்தை இந்திய அரசாங்கம் தடைசெய்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்களிடம் இந்த ஆவணப்படத்தின் இணைப்பை அகற்றுமாறு கேட்டு கொண்டதன் மூலம் இந்த ஆவணப்படத்தின் பரவலை இந்திய அரசு கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையை அப்பட்டமான "சென்சார்ஷிப்"(தணிக்கை) என்று எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. நேற்று(ஜன 24) மாலை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் நடத்திய இதேபோன்ற திரையிடல் சம்பவத்தை அடுத்து, பல்கலைக்கழகத்தில் இணையம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி இந்த ஆவணப்படத்தை பார்த்த மாணவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதே போன்ற ஒரு சம்பவம் ஹைதெராபாத் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.