பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது
டெல்லி வடகிழக்கு பேகம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியினை சேர்ந்த 6 வயது சிறுமி படித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி பேருந்தில் வீட்டிற்கு திரும்பிய சிறுமி சோர்வாக இருப்பதை கண்டு சந்தேகமுற்ற பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி தன்னோடு வயதில் மூத்த மாணவன் ஒருவன் தன்னை பள்ளி பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
துணை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையம்
இதனிடையே இந்த விவகாரம் குறித்த தகவல் டெல்லி மகளிர் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதனையடுத்து மகளிர் ஆணையத்தில் இருந்து விளக்கம் கேட்டு காவல்துறை துணை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என கூறப்படுகிறது. அதன்பேரில், குற்றம்சாட்டப்பட்ட மாணவன் மீது பேகம்பூர் காவல்துறை ஐபிசி 354, 228A மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அந்த மாணவனிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள். டெல்லியில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த விபரீத செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்