பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
பாகிஸ்தானின் பெஷாவரில் நேற்று(ஜன 30) நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை, இறந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உள்ளது, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. MEA செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்விட்டரில், "நேற்று பெஷாவரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது. பலரின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார். மசூதியின் முக்கிய மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதை அடுத்து இந்த குணவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு
தன் உடலில் வெடிகுண்டு வைத்திருந்த அவர், மசூதியில் தொழுகையின் போது முன் வரிசையில் இருந்ததாகவும், அவர் தன்னைத்தானே வெடிக்க வைத்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு சட்ட விரோத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்(TTP) பொறுப்பேற்றுள்ளது. ஜியோ நியூஸிடம் பேசிய பெஷாவர் போலீஸ் அதிகாரி முகமது அய்ஜாஸ் கான், இந்த குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும், வெடிகுண்டு வீசியவரின் தலை அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். "தாக்குதல் நடத்தியவர் குண்டுவெடிப்புக்கு முன்பே போலீஸ் சார்ந்த வேலையில் இருந்திருக்கலாம். மேலும், அவர் உள்ளே நுழைவதற்கு அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தியிருக்கலாம்" என்று முகமது அய்ஜாஸ் கான் கூறியதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.