'பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை' - முதல்வர் எச்சரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று(அக்.,11)3வது நாளாக நடந்தது. இதன் கேள்விநேர பகுதியில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு காவலர்களால் நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தினை கொண்டு வந்தனர் என்று கூறப்படுகிறது. அந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி முக்கொம்பில் கடந்த 4ம் தேதி மாலை 4 மணியளவில் முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு உயரதிகாரிகளிடம் எவ்வித அனுமதியில்லாமல் சென்ற காவலர்கள் சுற்றுலாத்தலத்திற்கு வருகை தந்திருந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டவுடன் உடனடியாக இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார்.
துறை ரீதியாக கடும் நடவடிக்கை - முதல்வர்
தொடர்ந்து அவர் பேசுகையில், 'அன்றைய தினமே, அந்த 3 காவலர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்' என்று தெரிவித்துள்ளார். மேலும், துறை ரீதியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் ரீதியாகவோ, வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டாலோ அவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, 110 விதியின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது இனி டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.