இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு முக்கியமான அறிவுரை வெளியிட்டது இந்தியா
ஈரான் இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது . சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பழி வாங்கும் நோக்கத்தோடு ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. எனவே, மத்திய கிழக்கில் மேலும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியா இன்று இஸ்ரேலில் உள்ள தனது நாட்டினரை "அமைதியாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியது. இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டதுடன், அனைத்து இந்திய குடிமக்களையும் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
"சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்": இந்தியா
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரித்து வருவதால், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று காலை கவலை தெரிவித்திருந்தது. "உடனடியாக மோதலின் தீவிரத்தைத் தணிக்கவும், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வன்முறையில் இருந்து பின்வாங்கவும், இராஜதந்திரப் பாதைக்குத் திரும்பவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். வளர்ந்து வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பிராந்தியத்தில் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. அந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பராமரிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.