தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் முதலிடம்
இந்தியாவில் அதிக தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். கடந்த மே மாதம், நாட்டின் முக்கியமான நான்கு விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 61% விமானங்கள் மட்டுமே சரியான நேரத்திற்குப் புறப்பட்டிருப்பதாக DGCA தகவல் தெரிவித்திருக்கிறது. இது ஏப்ரலில் (70%) இருந்ததை விட குறைந்த சதவிகிதமாகும். இந்தியாவில் நாளொன்றுக்கு 250 விமானங்களை இயக்கி வருகிறது ஸ்பைஸ்ஜெட். இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவும், நேரந்தவறாமைக்கான பட்டியலில் ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது இடத்திலிருந்து, மே மாதத்தில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தை விட, மே மாதத்தில் இரண்டு மடங்க அதிகமாக விமானங்களை தமாதமாக இயக்கியிருக்கிறது ஏர் இந்தியா.
உலகளாவிய விமானங்களின் புறப்பாடு:
கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானங்களில் 15% விமானங்கள் மட்டுமே தாமதமாகப் புறப்பட்டிருக்கின்றன. உலகளவில் பிற விமான சேவை நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இது குறைந்த அளவாகவே இருக்கிறது. இதே காலக்கட்டத்தில், அமெரிக்காவில் இருந்து புறப்படும் விமானங்களில் 30% விமானங்களும் , பிரிட்டனில் 20% விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலத்திலும், அதற்குப் பிறகும் குறைந்த அளவு பயணிகளையே கொண்டிருந்த இந்திய விமான சந்தை, திடீரென அதிகளவிலான பயணிகள் வரத்தை சந்தித்து வருகிறது. அதிகரித்து வரும் பயணிகள் அளவு, குறைந்து வரும் விமான சேவைகள், திவாலாகும் நிலையில் இருக்கும் விமான சேவை நிறுவனங்கள் போன்றவைகளும் தாமதமான விமான புறப்பாட்டிற்கான காரணமாகக் கூறப்படுகிறது.