நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இந்திய பாணியில் விதவிதமான சீருடை அறிமுகம்
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கௌரவிக்கும் கட்டிடக்கலையுடன் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சீருடையும் இந்திய பாணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த வாரம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைத்து நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நடக்க இருக்கும் நிலையில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி சிறப்பு கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்க இருக்கிறது. சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில்தான் நடைபெறும். அதற்கு அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 19-ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒரு சிறிய 'பூஜை'க்குப் பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்படி நுழைவார்கள்.
நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையை வடிவமைத்த NIFT
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியை(NIFT) சேர்ந்த நிபுணர்கள் நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையை வடிவமைத்துள்ளனர். இதற்கு முன், நாடாளுமன்ற ஊழியர்கள் அணிந்து கொண்டிருந்த 'பந்த்கலா' சட்டைகளுக்கு பதிலாக அவர்களுக்கு வாடாமல்லி நிற/இளஞ்சிவப்பு நிற நேரு ஜாக்கெட் வழங்கப்பட உள்ளது. அவர்களது சட்டைகள் தாமரை மலர் வடிவமைப்புடன் அடர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும், அவர்களது பேன்ட்டுகள் காக்கி நிறத்தில் இருக்கும். இரு அவைகளிலும் உள்ள மார்ஷல் அதிகாரிகளின் உடையும் மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் மணிப்பூரி தலைப்பாகை அணிய உள்ளார்கள். நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் உடையும் மாற்றப்பட இருக்கிறது. சஃபாரி உடைகளுக்குப் பதிலாக, அவர்களுக்கு இராணுவ உடைகளை போன்ற உருமறைப்பு ஆடைகள் வழங்கப்பட உள்ளது.