31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு: அமித் ஷாவை முதன்முறையாக சந்தித்தார் முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் 31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறுகிறது. 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராகப் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் கர்நாடக முதலமைச்சர் சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதால், அம்மாநிலத் துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்கா பங்கேற்கிறார். மேலும், புதுச்சேரி, அந்தமான் நிகோபர் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஆறு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
தனிப்பட்ட சந்திப்பு
அமித் ஷா - முதல்வர் விஜய் தனிப்பட்ட சந்திப்பு
மாநாட்டிற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை, கோவளத்தில் உள்ள விடுதியில் முதலமைச்சர் விஜய் நேரில் வரவேற்றார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித் ஷாவை விஜய் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
இருவரும் சிறிது நேரம் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
விவாதம்
முக்கிய விவாதப் பொருட்கள்
இன்றைய கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவு, காவேரி நீர் பங்கீடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முதலீடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க விரைவு நீதிமன்றங்களை அமைப்பது மற்றும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்த அச்சங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தமிழக மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் தனியாகச் சந்தித்துக் காவிரி விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புள்ளது.