தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநில அரசுகள் வனப்பகுதிகளில் உள்ள காட்டுயானைகள் கணக்கெடுக்கப்படும் பணியினை மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு தனி தனியாக கணக்கெடுக்காமல், 4 மாநிலங்களையும் சேர்த்து தென்னிந்திய அளவிலான காட்டு யானைகளின் கணக்கெடுப்பானது இன்று(மே.,17)காலை துவங்கியது.
இந்த கணக்கெடுப்பு பணியானது வரும் 19ம்தேதி வரை 3 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி வனக்கோட்டங்களில் 7 வனசரகக்கங்களில் 42 இடங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்புப்பணியில் வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், இளங்கலை வனவியல் மாணவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
யானை
தகவல்கள் அனைத்தும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்
இந்த யானை கணக்கெடுப்பு பணியானது 3 முறைகளை பின்பற்றி நடத்தப்படும்.
முதல் நாளில் நேரடியாக சென்று யானைகளை கணக்கெடுத்தல், இரண்டாவது நாள் யானையின் சாணத்தை வைத்தும், மூன்றாவது நாள் நீர்நிலை பகுதிகளில் கணக்கெடுப்பு பணி என பணிகள் வகைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை, நீலகிரி வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறும்.
யானைகளின் சாணம், கால்தடம், நீர்நிலைகளுக்கு அவைகள் வந்து செல்வது, யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பது ஆகியனவை மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுப்பு நடக்கும்.
இதில் சேகரித்த தகவல்கள் அனைத்தும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.