'ராஜீவ் எதிர்த்தார், சஞ்சய் வற்புறுத்தினார்'; நெருக்கடி நிலை பிளவு குறித்து சோனியா காந்தி சுயசரிதையில் தகவல்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு தவறான முடிவு என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தனது 'பிளாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey of Love) என்ற சுயசரிதை நூல் வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்திரா காந்தி அடிப்படையில் ஒரு ஜனநாயகவாதி என்றும், இந்த கடுமையான முடிவை அமல்படுத்திய பிறகு அவர் ஒருபோதும் நிம்மதியாக இருக்கவில்லை என்றும் சோனியா குறிப்பிட்டுள்ளார்.
குடும்பப் பிளவு
ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி இடையே வெடித்த குடும்பப் பிளவு
நெருக்கடி நிலையை அமல்படுத்தும் முடிவு காந்தி குடும்பத்திற்குள் பிளவை உருவாக்கியதாக சோனியா காந்தி தனது நூலில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
நெருக்கடி நிலை தீர்மானத்தைச் சஞ்சய் காந்தி தீவிரமாக வற்புறுத்திய நிலையில், ராஜீவ் காந்தி அதை முற்று முதலாக எதிர்த்து அடுத்த பொதுத்தேர்தல் வரை காத்திருக்குமாறு இந்திராவிடம் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் குடும்ப இரவு உணவின் போது எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும் என சஞ்சய் கொடுத்த தீவிர அழுத்தமே இந்த கடுமையான முடிவுக்கு முதன்மை காரணமாக அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சஞ்சய் காந்தியின் அத்துமீறல்கள்
சஞ்சய் காந்தியின் அத்துமீறல்களும் கட்டுப்படுத்தத் தவறிய சூழலும்
அரசாங்கப் பொறுப்புகள் எதுவும் வகிக்காத போதிலும், சஞ்சய் காந்தி நெருக்கடி நிலைக் காலத்தில் அதிகார மையமாக செயல்பட்டு கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குடிசை அகற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார்.
இத்தகைய வரம்பற்ற அதிகாரங்களை இந்திரா காந்தி முன்கூட்டியே தடுத்துக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்திருந்தால் நாட்டிற்கு ஏற்பட்ட பல மாபெரும் இழப்புகளைத் தவிர்த்திருக்க முடியும் என சோனியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் இந்த கடுமையான முடிவை எடுக்க இந்திராவிற்கு அதிக அழுத்தம் தந்ததாக அவர் கூறியுள்ளார்.
சுயசரிதை நூல்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சோனியா காந்தியின் புதிய சுயசரிதை நூல்
வரும் நவம்பர் 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ள இந்த சுயசரிதை நூல், சோனியா காந்தியின் இத்தாலி இளமைக் காலம் முதல் ராஜீவ் காந்தியுடனான திருமணம் வரையிலான பல உணர்வுப்பூர்வமான சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது.
நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த அத்துமீறல்களுக்கு இந்திரா காந்தி பின்னர் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதையும் சோனியா நினைவு கூர்ந்துள்ளார்.