நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர்
கோவை 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கடந்த ஜனவரி மாதம் 26ம்தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம்.ரவியிடம் சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவின்கீழ் விருதுபெற்று கவுரவிக்கப்பட்டார். அதன்படி அவருக்கு ஓர் சான்றிதழும், ரூ.10லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை சிறுதுளி அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அப்போது 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சிறுதுளியின் முக்கிய குறிக்கோள் நீர்பாதுகாப்பு, காடு வளர்ப்பு, கழிவு மேலாண்மை, விவசாயம் மேம்படுதல், விழிப்புணர்வு உருவாக்கம் ஆகியன ஆகும். அதன்படி தடுப்பணைகள் கட்டுதல், புதிய குளங்களை உருவாக்குதல், போன்றத்திட்டங்கள் மூலம் 17ஏரிகள், 20குளங்கள், 30ஓடைகள், 10தடுப்பணைகள் மூலம் 86 லட்ச கன மீட்டருக்கு மேல் சேமிப்பு கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
வெகுமதி தொகையான 10 லட்சம் நீர்நிலை மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்தப்படும்
இதனைதொடர்ந்து சிறுதுளி தற்போது புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, கரூர், கடலூர், சென்னை முதலிய இடங்களில் நீர்சேமிப்பு பணிகளை துவங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இனிவரும் காலங்களில் நிலத்தடி நீரின் தரத்துக்காக கழிவுநீர் சுத்திகரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக ஆளுநரிடமிருந்து பெறப்பட்ட வெகுமதி தொகையான ரூ.10லட்சத்தை வன எல்லைக்கு மிக அருகில் உள்ள நரசிபுரம் பகுதியிலுள்ள நீர்நிலை மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை அவர் வெளியிட்டார். அங்குள்ள பல தடுப்பு அணைகள் பழுதாகியுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளை தூர்வாரி புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இதன் மூலம் நீர்மட்டம் அதிகரித்து 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.