SIR படிவங்களை நீங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லையா? இன்றே கடைசி நாள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நிறைவடைகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 6.41 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுக்காக விநியோகிக்கப்பட்ட இந்தப் படிவங்களைச் சமர்ப்பிக்கும் பணி கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 4 ஆம் தேதியுடன் நிறைவடையத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், வாக்காளர்களின் வசதிக்காக இரண்டு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதுவரை திரும்பப் பெறப்பட்டுப் பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் மூலம் இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் என மொத்தமாக சுமார் 80 லட்சம் பேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பட்டியல்
வரைவு வாக்காளர் பட்டியல்
வாக்காளர்கள் இன்றைக்குள் தங்களுக்கு வழங்கப்பட்ட SIR கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து வாக்காளர் உதவி மையம் அல்லது வாக்குச் சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை படிவங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், வரும் டிசம்பர் 19 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இடம் பெறாமல் போக வாய்ப்புள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலின் மீது அடுத்த ஆண்டு ஜனவரி 18 வரை மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்படும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இனியும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவது மிகவும் குறைவு என்பதால், பொதுமக்கள் தாமதமின்றி இன்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.