பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய்
டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் மகனை தனியாக வளர்த்த ஒரு தாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. ஒரு சிறுவனின் பாஸ்போர்ட்டில் இருந்து அவனது தந்தையின் பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் மகன், சிறு குழந்தையாக இருக்கும் போதே அவனது தந்தையால் கைவிடப்பட்டான். அதற்கு பிறகு, அவனது தாய் தான் அவனை ஒரே ஆளாக வளர்த்திருக்கிறார். அந்த சிறுவனின் தாய்(மனுதாரர்) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மகனின் பாஸ்போர்ட்டில் இருந்து அவனது தந்தையின் பெயரை நீக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இதை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், இது தந்தையால் முற்றிலுமாக கைவிடப்பட்ட குழந்தையின் வழக்குகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.
தந்தையின் பெயர் இல்லாமல் பாஸ்போர்ட் மீண்டும் வழங்கப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம்
"அத்தகைய சூழ்நிலையில், அத்தியாயம் 8இன் ஷரத்து 4.5.1 மற்றும் அத்தியாயம் 9இன் ஷரத்து 4.1 ஆகியவை தெளிவாக இந்த வழக்குக்கு பொருந்தும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று இதை விசாரித்த அமர்வு கூறியது. எனவே, பாஸ்போர்ட்டில் இருந்து குழந்தையின் தந்தையின் பெயரை நீக்கிவிட்டு, தந்தையின் பெயர் இல்லாமல் மைனர் குழந்தைக்கு ஆதரவாக பாஸ்போர்ட் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது போன்ற சூழ்நிலைகளில் பெற்ற தந்தையின் பெயரை நீக்கலாம் என்றும் குடும்பப்பெயரை மாற்றலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. "பெற்றோருக்கு இடையே திருமண தகராறு ஏற்பட்டால், இது போன்ற குழந்தையின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது," என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.