பத்ம பூஷண் 2026: 12 மொழிகள், 1300+ மேடைகள்; அரிய கலைக்கு உயிர் கொடுத்த டாக்டர் ஆர். கணேஷ்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிக அரிய மற்றும் பழமையான கலை வடிவமான 'அவதானம்' கலையில் சிறந்து விளங்கும் கர்நாடகாவை சேர்ந்த 63 வயது அறிஞர் சதாவதானி டாக்டர் ஆர். கணேஷிற்கு, கலை மற்றும் இந்திய கலாச்சார பாரம்பரிய துறைகளில் அவர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, மே 25 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பத்ம விருதுகள் 2026 விழாவில் வழங்கப்படும்.
விவரங்கள்
'அவதானம்' என்றால் என்ன?
ஒரே நேரத்தில் பலர் கேட்கும் கேள்விகளுக்கு, மனதை ஒருமுகப்படுத்தி உடனடியாகப் பதிலளிக்கும் ஒரு கடினமான நினைவாற்றல் மற்றும் பன்னோக்குத் திறன் சார்ந்த கலை வடிவமே அவதானம் ஆகும். இத்தகைய அரங்கேற்றங்களின் போது, கலைஞர் ஒரே சமயத்தில் இலக்கண முறைப்படி கவிதைகளை இயற்ற வேண்டும், கணித புதிர்களுக்கு விடை காண வேண்டும், அதே நேரத்தில் பல அறிஞர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் இலக்கிய நயத்தோடு பதிலளிக்க வேண்டும். 1981-ஆம் ஆண்டில் கணேஷ் இக்கலையைக் கையில் எடுத்தபோது, கர்நாடகாவில் கன்னட மொழியில் அவதானம் செய்யக்கூடிய உயிரோடு வாழும் கலைஞர்கள் எவருமே இல்லை. இக்கலையை ஒற்றை ஆளாக மீட்டெடுத்த அவர், இதுவரை கன்னடம், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் பிராகிருதம் ஆகிய மொழிகளில் 1,300-க்கும் மேற்பட்ட அவதான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
பயணம்
பொறியியலாளர் டு பன்மொழிப் புலவர்
1962-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் பிறந்த டாக்டர் கணேஷ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பின்னர் IISc-இல் மெட்டலர்ஜி பிரிவில் முதுகலை பட்டம், சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம், கன்னட அவதானம் குறித்த ஆய்விற்காக ஹம்பி பல்கலைக்கழகத்தில் டி.லிட்(D.Litt.) பட்டம் ஆகியவற்றை பெற்றுள்ளார். கன்னடம், சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், இந்தி, மராத்தி, ஆங்கிலம், பிராகிருதம், பாலி, கிரேக்கம், லத்தீன் மற்றும் இத்தாலியன் என 12 மொழிகளில் சரளமாகப் பேசும் இந்தியாவின் முதன்மை பன்மொழிப் புலவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
அங்கீகாரம்
கலைத்துறையில் புதுமைகள் மற்றும் விருதுகள்
கணேஷ், ஒரே நபர் நிகழ்த்தும் புதிய யக்ஷகான வடிவமான 'ஏகவ்யக்தி யக்ஷகானா'-வை உருவாக்கினார். கவிதை, ஓவியம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றை இணைக்கும் 'காவிய-சித்ர-கீத-நிருத்யா' கலை வடிவத்தை உருவாக்கியுள்ளார். எளிய மக்களுக்கும் புரியும் வகையில் 120 செவ்வியல் ராகங்களை அறிமுகப்படுத்திய ராகானுராகா நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவர் 29 வயதில், கர்நாடக அரசின் மிக உயரிய 'ராஜ்யோத்சவ பிரஷஸ்தி' விருதை பெற்றார். 2003-ஆம் ஆண்டு, இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து சமஸ்கிருத இலக்கியத்திற்கான 'பாதராயண-வியாச புரசுகார்' விருது, 2021 ஆண்டில் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருது உள்ளிட்டவைகளை பெற்றுள்ளார்.
#PeoplesPadma
#PeoplesPadma என்பது என்ன?
அடித்தட்டு சாதனையாளர்களுக்குப் பொது மற்றும் சுய பரிந்துரைகளை ஊக்குவிப்பதன் மூலம் பத்ம விருதுகளை மேலும் அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்காக, இந்திய அரசால் #PeoplesPadma அல்லது மக்கள் பத்ம முயற்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம், தேசிய அளவில் அறியப்பட்ட ஆளுமைகளுடன், அதிகம் அறியப்படாத நாயகர்களையும் அடித்தட்டுப் பங்களிப்பாளர்களையும் முன்னிலைப்படுத்துகிறது. இந்த விருதுகள், இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற பாகுபாடின்றி, அனைத்துத் துறைகளிலும் உள்ள சிறப்புகளை அங்கீகரிக்கின்றன. வெளிச்சத்திற்கு வராமல், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்களைக் கௌரவிப்பதன் மூலம், பத்மா விருதுகளை 'PeoplesPadma'வாக மாற்றுவதே இதன் பரந்த நோக்கமாகும்.