தமிழகத்தில் அதிகபட்சமாக எத்தனை பேர் அமைச்சராகலாம்? அரசியல் சாசன சட்டம் என்ன சொல்கிறது?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் 'திமுக -அதிமுக' என்ற ஐந்து தசாப்த கால இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகம்(தவெக) கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் விஜய் உடன் ஏற்கனவே 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று மேலும் 23 அமைச்சர்கள் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைச்சரவை விரிவாக்கம் ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. தமிழக வரலாற்றில் 1952-க்குப் பிறகு, தனி மாநிலமாக உருவான பின் முதன்முறையாகக் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு அளித்து இந்தக் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் பங்கெடுத்துள்ளது. இச்சூழலில், ஒரு மாநில அமைச்சரவையில் அதிகபட்சமாக எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம் என்பது குறித்த சட்ட விதிகளை நாம் இங்கு பார்க்கலாம்.
சட்டம்
91-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம், 2003
முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தவும், கட்சிக்குள் இருக்கும் சீனியர்களின் அதிருப்தியைச் சமாளிக்கவும் தங்களுக்குத் தோன்றிய எண்ணிக்கையில் தாராளமாக அமைச்சர் பதவிகளை வழங்கி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த 2003-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 91-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் உட்பட ஒட்டுமொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் மொத்தச் சட்டமன்ற உறுப்பினர்களின் (MLAs) எண்ணிக்கையில் 15 சதவீதத்தைத் தாண்டக் கூடாது எனத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டது. அதேநேரம், சிறிய மாநிலங்களாக இருந்தாலும் அமைச்சர்களின் எண்ணிக்கை 12-க்கு குறைவாக இருக்கக் கூடாது என்ற விதியும் இதில் சேர்க்கப்பட்டது.
வரம்பு
தமிழகத்தில் 35 பேர் மட்டுமே சாத்தியம்
இந்த 15 சதவீத வரம்புக் கணக்கின்படி பார்த்தால், தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234 ஆகும். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் உட்பட அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும். அதைத் தாண்ட சட்டப்படி அனுமதியில்லை. அரசியல் சாசன விதிகளின்படி, சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரைக் கூட முதலமைச்சர் தனது அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்க முடியும். ஆனால், அவர் பதவியேற்ற தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தவறினால், 6 மாதக் கெடு முடிந்ததும் அவரது அமைச்சர் பதவி தானாகவே பறிபோய்விடும்.