மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவர் கடந்த ஜூலை 17ம்.,தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கான நீதிமன்றக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும்நிலையில், அவரது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 15ம்.,தேதி சிறையில் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறைத்துறை மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி, அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு, இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது உடல்நிலை சீராக இல்லை என்பதால் உடனடியாக அவர் அன்றிரவே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச்செல்லப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது கால் மரத்து போகும் பிரச்சனை இருந்து வந்த நிலையில், அவருக்கு சி.டி. ஸ்கேனுடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேனும் எடுக்கப்பட்டது. அதன் முடிவில் அவரது மூளைக்கு செல்லும் நரம்புகளில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு வயிற்றுப்புண், குடல்புண் உள்ளிட்டவைகளும் இருப்பதால் 6வது.,நாளான இன்றும் அவரை இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரிசோதித்துள்ளனர். நரம்பியல், இதயவியல் துறை மருத்துவர்களும் சிகிச்சையளித்து வருகிறார்கள். தற்போது இதுகுறித்து மருத்துவர்கள், "செந்தில் பாலாஜி மூளை நரம்பிலுள்ள ரத்த அடைப்புகளை கரைக்க மருந்துகள் வழங்கப்படுகிறது" என்றும், "கழுத்து பின்புறமுள்ள சவ்வில் பாதிப்புள்ளது. அதுவே அவரது கடும் தலைவலி காரணம். இதற்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது" என்றும் கூறியுள்ளனர்.