அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் வெளியேறத் தயார்: எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
செய்தி முன்னோட்டம்
அதிமுகவிலிருந்து விலகி ஏற்கனவே 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அவர் வெளியிட்ட இந்தத் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிற்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாமல் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் விரைவில் கட்சியைவிட்டு வெளியேறி தவெகவில் இணையப் போவதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
விமர்சனம்
EPS மீது கடுமையான விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியது தமக்கு வரப்பிரசாதமாக அமைந்ததாகவும், இல்லையென்றால் முன்னாள் அமைச்சராக முடங்கிப் போய் வாயை பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்திருக்கும் என்றும் அவர் கிண்டலாகக் கூறினார்.
மேலும், தற்பொழுது எதிர்க்கட்சி வரிசையில் எடப்பாடிக்கு நேர்எதிரே அமரும் வாய்ப்பு தனக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்கள் தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருவது அதிமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில், அமைச்சர் செங்கோட்டையனின் இந்த வெளிப்படையான அறிக்கை, வரவிருக்கும் நாள்களில் அதிமுகவில் மேலும் பலத்த உள்கட்சிப் பிளவையும், தொடர்ச்சியான சட்டமன்ற உறுப்பினர்களின் தாவல்களையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.