பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை; சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தனது உரையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டைப் பிளவுபடுத்தும் சட்டங்களுக்கு நவீன சமூகத்தில் இடமில்லை என்றும் அவை அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். "உச்சநீதிமன்றம் பொது சிவில் சட்டம் பற்றி பலமுறை விவாதங்களை நடத்தி, உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நாட்டின் பெரும் பகுதியினர், தற்போதைய சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம், ஒரு பாரபட்சமான சிவில் சட்டம் என்று உணர்கிறார்கள். அது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவு, அதை நிறைவேற்றுவது நமது கடமை." என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.
பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி
பொது சிவில் சட்டம் குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இது குறித்து பரவலான விவாதங்கள் இருக்க வேண்டும், ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன்வர வேண்டும். மத அடிப்படையில் நாட்டைப் பிரிக்கும் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும். நவீன சமுதாயத்தில் அவர்களுக்கு இடமில்லை. காலம் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தைக் கோருகிறது. அதன் பின்னர் மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் இருக்கும்." என்று கூறினார். முன்னதாக, லோக்சபா தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில், தேசத்தின் நலன் கருதி ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை வலியுறுத்தி இருந்தது. இந்தப் பின்னணியில், பிரதமரின் கருத்துக்கள், தற்போதைய ஆட்சிக்காலத்தில் இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கி நகரும் நோக்கத்தை அரசாங்கத்தின் தரப்பில் சுட்டிக்காட்டுகிறது.