மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் புதிய மாற்றத்தை முன்மொழிந்திருக்கும் செபி!
மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் புதிய மாற்றம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI). அதன்படி, இனி மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் திட்டத்தின் அடிப்படையில் 'மொத்த செலவு விகிதத்'தை (Total Expense Ratio - TER) கணக்கிடாமல், அவை கையாளும் AUM (Asset Under Management) அடிப்படையில் கணக்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது செபி. ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அதில் மொத்த செலவு விகிதம் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் முதலீடு செய்யவிருக்கும் திட்டத்தில் நமது முதலீட்டை கையாளுவதற்காக ஆகும் செலவே TER எனப்படுகிறது. இந்த TER-ஆனது நாம் முதலீடு செய்யும் ஒவ்வொரு திட்டத்திற்கும் மாறுபடும். பொதுவாக 2% முதல் 2.5% வரை TER வசூலிக்கப்படும்.
இதில் என்ன மாற்றம்:
இது வரை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மற்றும் அது தொடர்பான செலவுகள் என்ற அடிப்படையில் தான் இந்த TER கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால், இனி ஒரு நிறுவனம் கையாளும் பண அளவை வைத்து இந்த TER-ஐ கணக்கிட வேண்டும் என புதிய திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது செபி. அதாவது ஒரு நிறுவனம் 2,500 கோடி வரையிலான பணமதிப்பை கையாளுகிறதெனில் அந்த நிறுவனம் ஈக்விட்டி திட்டங்களில் 2.55% வரை TER வசூலித்துக் கொள்ளலாம். இதுவே இந்த பணமதிப்பு கூடக் கூட TER-ன் மதிப்பு குறைந்து கொண்டே வரும். 5,000 கோடி வரை கையாளும் நிறுவனங்கள் 2.30%. அதன் பின்பு கூடும் ஒவ்வொரு ஆயிரம் கோடிக்கும் 0.05% வரை TER குறைந்து கொண்டே வரும்.