"இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி
சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோவின் சூரிய ஆராய்ச்சி ஆய்வுக்கோளான ஆதித்யா L1 இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பிரபஞ்சத்தை நன்கு புரிந்து கொள்வதற்கான அயராத முயற்சிகள் தொடரும் என்று கூறியுள்ளார். "முழு மனிதகுலத்தின் நலனுக்காக பிரபஞ்சத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்காக எங்கள் அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும்" என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, சந்திரயான் 3ஐ நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இந்தியா, வரலாறு படைத்தது.
சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆராய இருக்கும் ஆதித்யா L1
அது நடந்து சில நாட்களுக்குள், ஆதித்யா L1 என்ற ஆய்வுகோளை சூரியனை ஆராய அனுப்பி, இந்தியா மீண்டும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்கக் கூடிய அறிவியல் கருவிகளை ஏந்தி கொண்டு நான்கு மாத பயணமாக ஆதித்யா L1 சூரியனை நோக்கி புறப்பட்டிருக்கிறது. 23.40 மணி நேர கவுன்டவுன் இன்று காலை 11:50 மணிக்கு முடிவடைந்த நிலையில், 44.4 மீட்டர் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதவியுடன் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா-L1 விண்கலம் இன்று புறப்பட்டது.